மண்ணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 7 பேர் கைது; 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மண்ணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 7 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைதுசெய்தனர். மேலும் 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமயபுரம், மார்ச்.4-
மண்ணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 7 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைதுசெய்தனர். மேலும் 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தல்
மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் அவ்வப்போது தகவல் கொடுத்தனர். ஆனால் இதுதொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், மணல் கடத்தல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மண்ணச்சநல்லூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
7 பேர் கைது
இந்தநிலையில் நேற்று மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் சிலர் மணல் கடத்தி வந்துகொண்டிருந்தனர். உடனே தனிப்படை போலீசார் 8 மாட்டு வண்டிகளை மடக்கிப்பிடித்தனர். அப்போது, ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், அவற்றை ஓட்டி வந்த நொச்சியம் குமரகுடியை சேர்ந்த வேம்படியான் (வயது 66), அவரது மகன் கோபிநாத் (35), அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (21), லட்சுமணன் (20), ரஞ்சித்குமார் (28), ரவி (35), முசிறி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த ரஜினி (35) ஆகிய 7 பேரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். தனிப்படை போலீசார் எடுத்த இந்த நடவடிக்கை மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story