தொப்பூர் அருகே கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்


தொப்பூர் அருகே கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 March 2021 8:40 PM GMT (Updated: 8 March 2021 8:41 PM GMT)

தொப்பூர் அருகே கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலியானார். மேலும் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து தஞ்சாவூருக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக நேற்று அதிகாலை சென்று கொண்டு இருந்தது.. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியை சேர்ந்த டிரைவர் மாதேஷ் (வயது 30) ஓட்டி வந்தார். அவருடன் மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மணியரசு (27), வினோத் (30), மைதிலி (35), முருகேசன் (30) ஆகிய 4 பேர் வந்தனர்.
இவர்களில் 2 பேர் லாரிக்குள்ளும், மற்ற 2 பேர் லாரியின் மேல் பகுதியில் கிரானைட் கற்கள் மீதும் அமர்ந்து வந்தனர். தொப்பூர் கட்டமேடு 2-வது வளைவில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த தொழிலாளி மணியரசு இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

4 பேர் படுகாயம்

மேலும் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவர் மாதேஷ் மற்றும் தொழிலாளர்களான வினோத், மைதிலி, முருகேசன் ஆகிய 4 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்தில் இறந்த மணியரசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story