நாகர்கோவில் வாகன சோதனையில் ரூ.1½ கோடி சிக்கியது
நாகர்கோவிலில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 50 லட்சம் சிக்கியது. சென்னை பதிவெண் கொண்ட கார் டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 50 லட்சம் சிக்கியது. சென்னை பதிவெண் கொண்ட கார் டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வாகன சோதனை
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க 18 பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி நாகராஜன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று தேரேகால்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
ரூ.1½ கோடி சிக்கியது
சோதனையில் வாகனத்தின் பின் பகுதியில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது. அதிகாரி அந்த பெட்டியை திறக்கும்படி காரில் வந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. ெமாத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 21 ஆயிரத்து 742 இருந்தது. இதனை தொடர்நது அதிகாரிகள் வாகனத்தில் வந்த டிரைவர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த கார் சென்னை பதிவெண் கொண்டதும், வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப கொண்டு வந்ததும் தெரிய வந்தது. ஆனால் பணம் ஏ.டி.எம். மையங்களில் செலுத்துவதற்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதனைதொடர்ந்து அதிகாரிகள் வாகனத்துடன் பணத்தை பறிமுதல் செய்து நாகர்கோவிலில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கோட்டாட்சியர் மயிலிடம் பண பெட்டியை ஒப்படைத்தனர். வங்கி பணம் என கூறி பணம் பட்டுவாடா நடத்த திட்டமிடப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.
பரபரப்பு
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பணம் கொண்டு வந்ததற்குரிய ஆவணங்களை ஒப்படைத்தால் பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் கொடுத்த சில ஆவணங்களில் குளறுபடி இருந்தது என்றனர்.
தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனையில் கட்டு, கட்டாக ரூ.1½ கோடி சிக்கிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story