சிவன் கோவிலில் நான்கு கால பூஜை


சிவன் கோவிலில் நான்கு கால பூஜை
x
தினத்தந்தி 9 March 2021 8:32 PM GMT (Updated: 9 March 2021 8:32 PM GMT)

சிவன் கோவிலில் நான்கு கால பூஜை

விருதுநகர்,
சிவராத்திரியை முன்னிட்டு நாளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், கிராமங்களில் குலதெய்வ வழிபாடும் நடைபெறுகிறது. 
மகா சிவராத்திரி 
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி திதி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
 மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் நான்கு கால பூஜைகள் நடக்கிறது. 
ஒவ்வொரு கால பூஜைக்கும் சிறப்பு நைவேத்தியம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 
சிவன் கோவில்கள்
விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், திருச்சுழியில் உள்ள திருமேனிநாத சுவாமி கோவில், அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவில், விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோவில், சிவகாசியில் விஸ்வநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில், ராஜபாளையத்தில் மயூரநாதசுவாமி ேகாவில் மற்றும் சொக்கநாதர் கோவில்,  சாத்தூர் சிதம்பரேஸ்வரர் கோவில், இருக்கன்குடி அருகே கைலாசநாதர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், சொக்கநாதன்புத்தூர் தவ நந்தீஸ்வரர் கோவில், சேத்தூர் திருக்கண்ஸ்வரர் கோவில், உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. 
குலதெய்வ வழிபாடு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குலதெய்வங்களை சிவராத்திரியன்று வழிபடும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
 சென்னை, பெங்களூரு மற்றும் கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சிவராத்திரியன்று குலதெய்வங்களை வழிபட திரளாக வருவதுண்டு. கூடமுடைய அய்யனார் கோவிலுக்கு பிற நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் ஆண்டுதோறும் சிவராத்திரி வந்து வழிபடுவது வழக்கம்.
 சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் சிவன் கோவில்களில் அடிப்படை வசதிகள் என்பது மிக குறைவாக இருந்து வருகிறது.
அடிப்படை வசதி 
 விருதுநகரில் உள்ள உள்ள சொக்கநாத சுவாமி கோவிலில், கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாத நிலையில் பக்தர்கள் பலர் தாமாகவே முன்வந்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளனர்.
 இதேபோன்று மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவில்களில் பராமரிப்பு பணி கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறையினர் இது பற்றி ஆய்வு செய்து உரிய பராமரிப்பு நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கையால் சுடப்பட்ட அப்பம்  
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாயாண்டி பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 11 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கரண்டி இல்லாமல் கையை விட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இந்த கையினால் சுடப்பட்ட அப்பத்தை படைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

Related Tags :
Next Story