பணகுடி அருகே கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
பணகுடி அருகே கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணகுடி:
பணகுடி அருகே மேலகடம்பன்குளம் கிராமம் உள்ளது. இங்கு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் கிராம மக்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை அடிப்படையில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். அதற்கான தொகையை ஆண்டு தோறும் ஆதீன நிர்வாகத்தில் செலுத்தி ரசீது பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் சம்பவத்தன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திடீரென்று அந்த பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் பொதுமக்களிடம் குத்தகை கட்டணம் வசூலிக்காமல் உள்ளது. குத்தகை கட்டணம் முறையாக செலுத்தாததால் நிலங்களை மீட்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் அதிகாரிகள் அடிக்கடி மிரட்டி வருகிறார்கள்.
பொதுமக்கள் குத்தகை கட்டணம் செலுத்த முன் வந்தாலும் அதனை ஆதீன நிர்வாகம் வாங்க மறுத்து வந்துள்ளது. இதனை கண்டித்து நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். மேலும் அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
Related Tags :
Next Story