தலையில் கல்லை போட்டு முதியவர் படுகொலை


தலையில் கல்லை போட்டு முதியவர் படுகொலை
x
தினத்தந்தி 10 March 2021 2:12 AM IST (Updated: 10 March 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தலையில் கல்லை போட்டு முதியவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

குளச்சல்:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தலையில் கல்லை போட்டு முதியவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
ரத்தவெள்ளத்தில் பிணம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஒரு கடையின் முன்பகுதியில் முதியவர் ஒருவர் நேற்று காலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
தலை நசுங்கிய நிலையிலும், அருகில் ஒரு கல்லும் கிடந்தது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
கொலை காட்சி பதிவானது
பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ேபாலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவரது தலையில் ஒருவர் கல்லை தூக்கி போடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. ஆனால் மர்மநபரின் உருவம் தெளிவாக தெரியவில்லை.
பின்னர் போலீசார் பிணமாக கிடந்தவர் யாரென்று விசாரணை நடத்தினர்.
கொன்றது யார்?
இதில் கொலையானவர் மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்த செல்ல நாடார் (வயது 67) என்பது தெரிய வந்தது. 
மேலும் பேச்சிப்பாறை பகுதியில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்த அவர், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நகை கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் விபத்தில் சிக்கியதால் நடக்கவே சிரமப்பட்டார். தொடர்ந்து கைத்தடியுடன் நடந்து வந்தார். இதனால் வாட்ச்மேன் வேலையும் பறிபோனது. பிச்சை எடுத்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த சில நாட்களாக மீன்பிடி துறைமுகத்தில் சுற்றி வந்த அவர் சம்பவத்தன்று இரவு கடையின் முன்பு படுத்த போது, மர்மநபர் ஒருவரால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
அவரை மர்மநபர் கொன்றது ஏன்? என தெரியவில்லை. மதுபோதையில் யாரேனும் அவரை கொன்றாரா? பிச்சை எடுத்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் யாரேனும் தீர்த்து கட்டினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செல்ல நாடாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக குளச்சல் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story