நெல் அறுவடையில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் விவசாயி தற்கொலை


நெல் அறுவடையில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால்  விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2021 2:22 AM IST (Updated: 10 March 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விவசாயி
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் எஸ்.ஏ. தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 61), விவசாயி. இவருடைய மனைவி ஏசுபாய். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
மாணிக்கம் சீதப்பால் பகுதியில் வயல்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த வயல்களில் நெல் அறுவடை நடந்து முடிந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லை என தெரிகிறது. பயிர் செய்வதற்காக வாங்கிய கடனை அடைக்கக் கூட போதுமான விளைச்சல் இல்லையே என ஏமாற்றமடைந்த மாணிக்கம், கடந்த சில நாட்களாகவே மன வருத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
தற்கொலை
நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. மனைவி மற்றும் பிள்ளைகள் பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. 
இந்த நிலையில் நேற்று காலை சீதப்பால் ஆண்டி தோப்பு சாலையோரம் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணிக்கத்தின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது மாணிக்கம் என்பதும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. 
 விசாரணை
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விவசாயத்தில் விளைச்சல் குறைவானதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story