மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை
மாசித்திருவிழாவையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நேற்று நள்ளிரவு நடைெபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி:
மாசித்திருவிழாவையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நேற்று நள்ளிரவு நடைெபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசி திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குடும்பத்துடன் மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் கூடியிருந்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் வெள்ளம் அலை மோதியது.
உணவு பதார்த்தங்கள்
விழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடந்தது. 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.
மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு பவனியாக கொண்டு வரப்பட்டது. இரண்டு குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.
ஒடுக்கு பூஜை
அப்போது இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய்ப்பகுதி சிவப்பு துணியால் கட்டப்பட்டிருந்தது. உணவு பதார்த்தங்கள் வெள்ளைத் துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோவிலை சுற்றி அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பூஜை நடந்து கொண்டிருக்கும்போது கொடி மரத்தில் உள்ள கொடி இறக்கப்பட்டது.
Related Tags :
Next Story