ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்


ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்
x
தினத்தந்தி 10 March 2021 2:36 AM IST (Updated: 10 March 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் தீப்பிடித்து கார் எரிந்தது.

ஊட்டி,

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் சலீம், சபரீஷ், விஜயலட்சுமி உள்பட 7 பேர் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டு இருந்தனர். 

கல்லட்டி மலைப்பாதை வழியாக நேற்று மாலை 18-வது கொண்டை ஊசியில் வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் தீப்பிடித்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரின் கதவை திறந்து வெளியே வந்து ஓடினர். 

பின்னர் தீ மளமளவென எரிய தொடங்கியது. சாலையின் நடுவே நிறுத்தப்பட்டு இருந்த காரே தெரியாத வகையில் தீ எரிந்தது. தீ அருகே இருந்த மரத்துக்கும் பரவியது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.

 வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் இருந்தவர்கள் முன் எச்சரிக்கையாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஒரு மணி நேரம் தீ எரிந்ததால் கார் முற்றிலும் சேதமடைந்தது. 

கார் அதிக சூடானதால் உள்ளே மின் விபத்து ஏற்பட்டதால் தீ பிடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story