செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரம் குலுக்கல் முறையில் தேர்வு கலெக்டர் தலைமையில் நடந்தது


செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரம் குலுக்கல் முறையில் தேர்வு  கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 10 March 2021 5:58 AM IST (Updated: 10 March 2021 5:58 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் நடந்தது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாகவும், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று ஒதுக்கீடு செய்யும் கணினி முறை குலுக்கல் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஜான்லூயிஸ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

அதனை தொடர்ந்து மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின்

முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்கள் கணினி முறை குலுக்கலின் அடிப்படையில் பிரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

பின்னர் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஜான்லூயிஸ் தெரிவித்ததாவது:-

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐயொட்டி 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சவாடி மையங்கள் அமைத்திட வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தற்போது சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 3,833 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் கணினி முறை குலுக்கல் செய்யப்பட்டு அதனடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவைப்படுகின்ற எண்ணிக்கையை விட 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களும், 30 சதவீத வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில், இந்த கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 044-27433500 என்ற எண்ணில் 1800 4257 088 மற்றும் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிகளிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story