13 சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனை
கேரளாவில் இருந்து கோவைக்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டதால் வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கோவை,
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தவிர கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கோவையை ஒட்டி உள்ள கேரள மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கேரள எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழைபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இ-பாஸ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லா விட்டால், கட்டாயம் கோவைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முதலில் அறிவிக்கப் பட்டது.
கேரளாவில் இருந்து தினமும் கோவைக்கு பணிக்காக வந்து செல்பவர்கள், பல்வேறு அலுவல் மற்றும் வணிக ரீதியாக வந்து செல்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சியில் 2 இடங்கள், ஆனைமலை, ஆனைக்கட்டி, வால்பாறை உள்ளிட்ட கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறையினர் இணைந்து கண்காணிப் பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ- பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சோதனையால் கேரளாவில் இருந்து வருபவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் நாள் என்பதால் வாளையாறு சோதனைச்சாவடியில் சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
ரெயில்களில் வரும் பயணிகளுக்கு உரிய சோதனை நடைபெறாத போது வாகனங்களில் வருபவர்கள் மீது மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல என்று பலரும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கொரோனா பரவலை தடுக்க கோவை- கேரளா இடையே பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. தற்போது கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் வாளையாறு சோதனைச் சாவடி அருகே பயணிகளை இறக்கிவிடுகின்றனர்.
அங்கிருந்து பயணிகள் கேரள பகுதிக்கு நடந்தும் ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்றும் கேரள மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு பஸ்களில் ஏறிச்செல்கிறார்கள்.
இது போல், கேரளாவில் இருந்து வரும் பஸ்கள் எல்லையில் நிறுத்தப் படுகிறது. அங்கிருந்து வாகனங்கள் மூலம் தமிழக எல்லைக்கு வருகின்றனர்.
Related Tags :
Next Story