வீட்டில் புதையல் இருப்பதாக 3 குழந்தைகளை நரபலி கொடுக்க தயாரான தாய் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் மீட்டனர்
திருத்தணி அருகே வீட்டில் புதையல் இருப்பதாக தனது 3 குழந்தைகளை பலியிட தாய் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூச்சி ரெட்டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி விஜயா. இவர்களது மகள் ஜெயந்தி (வயது 34). இவர் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
வாரத்தில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஜெயந்தி தனது தாய் வீட்டுக்கு சென்று சாமியாடி குறி சொல்வது வழக்கம். அப்போது அவர் கோழி உள்பட சில பிராணிகளை பலி கொடுத்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள புதையலை எடுப்பதற்காக தனது 3 குழந்தைகளையும் நரபலி கொடுக்க ஜெயந்தி முடிவு செய்ததாக தெரிகிறது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட சமூகநல அலுவலர் பிரிவில் இயங்கும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு 181 என்ற சேவை பிரிவுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த சேவையின் மைய நிர்வாகி ஞான செல்வி, வழக்கு பணியாளர் சரண்யா ஆகியோர் திருத்தணி தாசில்தார் ஜெயராணிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருத்தணி வருவாய் துறையினர், மாவட்ட சமுக நல அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஜெயந்தியின் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மகள், பிளஸ்- 1 படிக்கும் 16 வயது மகள், மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகன் ஆகியோரை வருகிற சனிக்கிழமை நரபலி கொடுக்க அவர்கள் முயன்று வந்ததாக தெரியவந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் சார்பிலும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயந்தியின் 3 குழந்தைகளையும் அதிகாரிகள் மீட்டு திருவள்ளூருக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story