கொங்கணாபுரம் அருகே கேட்பாரற்று நின்ற கார்: மிளகாய் பொடி தூவி காதல் ஜோடி கடத்தலா?


கொங்கணாபுரம் அருகே கேட்பாரற்று நின்ற கார்: மிளகாய் பொடி தூவி காதல் ஜோடி கடத்தலா?
x
தினத்தந்தி 10 March 2021 11:57 AM IST (Updated: 10 March 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரம் அருகே கேட்பாரற்று நின்றிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால், காதல் ஜோடி கடத்தப்பட்டனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி,

கொங்கணாபுரம் அருகே மோட்டூர் பறைக்காடு பகுதியில் கண்ணாடி உடைந்த நிலையில் ஒரு சொகுசு கார் கடந்த சில நாட்களாக கேட்பாரற்று நின்றிருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த கார் கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த சம்சுதீன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், உறவினர் ஒருவர் திருமணத்திற்காக காரை அவரிடம் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது.

மேலும் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், காரின் இருக்கைகளில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சென்று விட்டு மீண்டும் வந்தபோது காரில் இருந்தவர்களை மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் கடத்தினார்களா? அல்லது காதல் ஜோடியினர் வந்தார்களா? அந்த காதலை ஏற்க மறுத்த உறவினர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து கடத்தி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காரில் போலீசார் சோதனை செய்தபோது பெங்களூருவில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் காருக்கு பணம் கட்டியதற்கான ரசீது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார் கேட்பாரற்று நின்றிருந்தது குறித்து அதன் உரிமையாளருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். 

தற்போது கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தான் தமிழகத்திற்கு வர முடியும் என்பதால் அந்த பரிசோதனை அறிக்கை பெற்றுக் கொண்டு வருவதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். கார் உரிமையாளரான சம்சுதீன் வந்த பின்னரே காரில் வந்தவர் விவரம், அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story