எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பாவிடினும் ஓட்டுப்பதிவு அவசியம் கலெக்டர் விழிப்புணர்வு
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை எனினும் நோட்டாவுக்காவது வாக்குப்பதிவு செய்து விடுங்கள் என வாக்குப்பதிவு குறித்த தகவல்களை திருமண அழைப்பிதழ் போல் அச்சிட்டு வழங்கி கலெக்டர் பேசினார்.
ஆரணி
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை எனினும் நோட்டாவுக்காவது வாக்குப்பதிவு செய்து விடுங்கள் என வாக்குப்பதிவு குறித்த தகவல்களை திருமண அழைப்பிதழ் போல் அச்சிட்டு வழங்கி கலெக்டர் பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
போளூர் தொகுதிக்குட்பட்ட களம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரிசி ஆலையில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் அரிசி ஆலை தொழிலாளர்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப் பதிவு செய்வது குறித்து கலெக்டர் சந்தீப்நந்தூர செயல் விளக்கம் அளித்தார். மேலும் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த தகவல் அடங்கிய துண்டு பிரசுரங்களை திருமண அழைப்பிதழ் போல அச்சடித்து அவர்களிடம் கலெக்டர் வழங்கினார்.
பணத்தை வாங்காதீர்கள்
அப்போது அவர் பேசுகையில், ‘‘வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் உங்கள் தொகுதியில் வேட்பாளரை பிடிக்கவில்லை என்றாலும் வாக்களிப்பது உங்கள் கடமை. கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் நோட்டாவுக்கு அந்த வாக்கை செலுத்தி விடுங்கள்.
பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தேவைகளைக் கேட்க பின்னர் நீங்கள் சென்றால் அவர் உங்களிடம் பணம் கொடுத்து விட்டேனே, இப்போது ஏன் வருகிறீர்கள் என்பார்.
எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு உங்களுடைய வாக்குகளை யார் நல்லவர் என பார்த்து வாக்களிப்பது அவசியம்’’ எனறார்.
கலைநிகழ்ச்சி
மேலும் அங்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த கலை நிகழ்ச்சியும் நடைபெற்றதை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
முகாமில் கலந்து கொண்ட அரிசி ஆலை உரிமையாளர்களிடம், ‘‘நீங்கள் வெளியூர்களுக்கு அனுப்பும் அரிசி மூட்டைகளில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டுங்கள்’’ என கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி ஸ்டிக்கர்களை அவர் வழங்கவே ஒவ்வொரு அரிசி முட்டையிலும் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
பின்னர் களம்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் போளூர் தாசில்தார் ஷாப்ஜான், பயிற்சி கலெக்டர்கள், அரிசி ஆலை சங்க கவுரவத் தலைவர் மணி, தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் சங்கர், பொருளாளர் ஆனந்தன் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் களம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் பலரும் இருந்தனர்.
===========
Related Tags :
Next Story