‘நற்செயல்கள்தான் சமுதாயத்தில் நல்லபெயரைப் பெற்றுத் தரும்’ திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பேச்சு


‘நற்செயல்கள்தான் சமுதாயத்தில் நல்லபெயரைப் பெற்றுத் தரும்’ திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பேச்சு
x
தினத்தந்தி 10 March 2021 7:31 PM IST (Updated: 10 March 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

‘கல்வித்தகுதி மட்டுமே நல்லவர்களாக மாற்றாது என்றும் நற்செயல்கள்தான் சமுதாயத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும்’ என்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பேசினார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, சேர்க்காட்டில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக விழா அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். துணைவேந்தர் தாமரைச்செல்வி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழாவில் உங்கள் அனைவருடன் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கண்ணுடையர் என்பவர் கற்றோர் (இதை ஜனாதிபதி தமிழில் உச்சரித்தார்) என்ற திருவள்ளுவரின் அறிவார்ந்த வார்த்தைகள் உங்களது லட்சியமாகத் திகழ்கின்றன. 
நமது புதல்விகளும், சகோதரிகளும், அனைத்து துறைகளிலும் தடைகளைத் தகர்த்து வருகின்றனர். இன்று, சிறந்த கல்வித் திறனுக்கான தங்கப் பதக்கம் பெற்ற 66 மாணவர்களில், 55 பேர் பெண்கள் என்பது இதற்கு தெளிவான சான்றாகும். இதேபோல, ஆராய்ச்சி பட்டம் பெற்ற 217 பேரில் 100 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியதாகும். பதக்கங்களையும், பட்டங்களையும் பெறுவதற்கு மேடைக்கு வந்த 10 மாணவர்களில், ஒன்பது பேர் பெண்கள் என்பதை நான் கவனித்து அறிந்து கொண்டேன். இது இந்தியாவின் பிரகாசமான வருங்காலத்தை பிரதிபலிக்கிறது.

சர்.சி.வி.ராமன் குறிப்பிட்டதைப் போல, உயர் கல்வி நிறுவனங்கள், அறிவு விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் இன்று பெருமைமிகு தருணமாகும். கடினமாக உழைத்து நீங்கள் உங்கள் பட்டங்களைப் பெற்றுள்ளீர்கள். இது சமுதாயத்தில் உங்களது வாழ்க்கையின் புனிதமான ஆரம்பமாகும். இனி, உங்களது சொந்த வாய்ப்புகள், முயற்சிகள், அறிவாற்றல் ஆகியவற்றின் வலிமையால், உங்களது வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டில் நீங்கள்தான் முன்னேற வேண்டும்.

உங்களது கல்வி உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை திறந்து விடும். உங்களில் பலர் உயர் கல்வியை மேற்கொள்ளக்கூடும். கற்றல் என்பது உண்மையில் வாழ்க்கை முழுவதும் நீளக்கூடியதாகும். நாம் அதிகம் கற்றால், நமது அறியாமை அதிகமாக விலகுவதை நாம் உணரலாம். இதனை ‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ (இதை ஜனாதிபதி தமிழில் உச்சரித்தார்) என்ற தமிழ் பொன்மொழி அழகாக உணர்த்தும். 
கல்வித் தகுதிகள் மட்டுமே உங்களை நல்ல மகனாகவோ, மகளாகவோ, அல்லது நல்ல அண்டை வீட்டாராகவோ மாற்றாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்களது நற்செயல்கள்தான் சமுதாயத்தில் உங்களுக்கு நல்லபெயரைப் பெற்றுத் தரும். நாம் புத்தகங்களில் இருந்து எதைக் கற்றோம் என்பதை விட, வாழ்க்கையில் நாம் எதைக் கற்கிறோம் என்பதுதான் அறிவு. இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு கல்வி வழங்கிய நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், நமது நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பங்களிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story