தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை - கலெக்டர் தகவல்


தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 March 2021 8:16 PM IST (Updated: 10 March 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் 6-ந் தேதி தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

கூடலூர்,

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.

பேரணியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் ஏந்தி சென்றனர். 

தொடர்ந்து புதிய பஸ் நிலையம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

பின்னர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பெண்களுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீ மதுரை, நெலாக்கோட்டை, ஓவேலி பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கோலங்கள் வரைந்தனர். 

அவற்றை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். பின்னர் தேர்தல் நாளில் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வாங்கக்கூடாது என்றார்.

அப்போது தேர்தல் நாளில் தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது என்று பெண்கள் கூறினர். அதற்கு வாக்குப்பதிவு நடைபெறும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். 

இதை மீறி தேயிலை தோட்டங்கள் இயங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பதிலளித்தார். பின்னர் சிறந்த கோலங்கள் வரைந்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். 

அப்போது பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறைகளை சுற்றி உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து கோக்கால் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story