விக்கிரவாண்டியில் துணி பண்டல் லோடு ஏற்றி சென்ற லாரியில் பயங்கர தீ - ரூ.60 லட்சம் பொருட்கள் நாசம்
விக்கிரவாண்டியில் துணி பண்டல் லோடு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
விக்கிரவாண்டி,
திருப்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு துணி பண்டல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுபட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் துறையூர் பொன்னுசங்கம் பட்டியை சேர்ந்த நடராஜ் (33) என்பவர் கிளீனராக பணியில் இருந்தார்.
லாரி நேற்று மதியம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் கல்லூரி அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டிருந்தது.
டயர் வெடித்தது
அப்போது திடீரென லாரியின் வலதுபுற முன்பக்க டயர் பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஒரு பகுதி கீழே இறங்கிய படி சென்றது. அப்போது டீசல் டேங்க் சாலையில் உரசியபடி சென்றதால், அதில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி கொண்டது.
கண் இமைக்கும் நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவியது. இதில் சுதாகரித்த டிரைவர் சுரேஷ் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கிளீனருடன் கீழே குதித்து தப்பினார்.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
தொடர்ந்து தீ மளமளவென லாரி முழுவதும் பரவி கொழுந்தவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெய்சங்கர், விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள்.
இதனால் அந்த பகுதியில் திருச்சி-சென்னை சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
உடன் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பிவிட்டனர்.
இதற்கிடையே விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரூ.60 லட்சம் நாசம்
இந்த விபத்தில் லாரி மற்றும் அதில் இருந்த துணி பண்டல்கள் முழுவதும் எரிந்து நாசமானது.. இதில் சேதமான துணிகளின் மதிப்பு ரூ. 60 லட்சம் இருக்கும் என்றும், லாரியின் மதிப்பு ரூ. 15 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story