திருப்பூர் மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு பல்லடத்தில் ஆதரவாளர்கள் மறியலால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த 2 எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த 2 எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாய்ப்பு மறுப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். சட்டமன்ற தேர்தலில் கடைசியாக 4 முறை அ.தி.மு.க. இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கரைப்புதூர் நடராஜன் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இவர் பல்லடம் சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளாக பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போதே அ.தி.மு.க.வில் மாணவர் அணி செயற்குழு உறுப்பினராக சேர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, உடுமலை தொகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ.க்களே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ள கரைப்புதூர் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. முன்னாள் அமைச்சராக இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு பல்லடம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாலைமறியல்
பல்லடம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் பல்லடம் தொகுதிக்கு கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நேற்று கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும், மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதனால் அந்த வழியாக சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவம் பற்றி அறிந்ததும் பல்லடம் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காங்கேயம்
இதுபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவரான உ.தனியரசு போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தமுறை காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.எஸ்.ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். உ.தனியரசுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. தாராபுரம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த 2 பேருக்கு இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story