கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரி சிறைபிடிப்பு
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கழிவுகளை ஏற்றி வந்த மினிலாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
பொள்ளாச்சி,
தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் உள்ளது. இதனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகளை ஏற்றி கோவை மாவட்டத்துக்கு கொண்டு வந்து அவற்றை கொட்டி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதைத்தடுக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள நடுப்புணியில் வடக்கிபாளையம் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
மினிலாரி சிறைபிடிப்பு
அப்போது அந்த வழியாக கேரள மாநில பதிவு எண் கொண்ட ஒரு மினி லாரி வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அந்த மினிலாரி நிறுத்தாமல் அதிவேகமாக சென்றது. இது குறித்து அந்தப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிற்கவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அந்த மினிலாரியை சேர்வைக்காரன்பாளையம் அருகே தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர்.
டிரைவரிடம் விசாரணை
பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த மினிலாரிக்குள் சோதனை செய்தபோது அதில் 4 எருமைக்கன்றுகள் இருந்தன. அதில் ஒன்று இறந்து இருந்தது. அத்துடன் அதில் இறைச்சி, பிளாஸ்டிக் உள்பட பல்வேறு கழிவுகள் இருந்தன.
உடனே அந்த மினிலாரியை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் கேரள மாநிலம் பாலக் காட்டில் இருந்து பொள்ளாச்சி பகுதியில் கொட்ட கழிவுகளை கொண்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story