300 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் எல்.இ.டி. விளக்குகள் அகற்றம்


அபராதம் விதிப்பு
x
அபராதம் விதிப்பு
தினத்தந்தி 10 March 2021 11:16 PM IST (Updated: 10 March 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 300 வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த காற்று ஒலிப்பான்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் அகற்றப்பட்டதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிகத்து வருகிறது. இந்த நிலையில் சிலர் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பொருத்தி வலம் வருகின்றனர். 

இந்த ஹாரன் மூலம் எழுப்பப்படும் சத்தம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதேபோல் எல்.இ.டி விளக்குகள் வாகனங்களில் பொருத்தப்படுவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் பாதிப்படைவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த தடையை மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ள காற்று ஒலிப்பான்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகளை அகற்ற வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் கடந்த ஒரு வாரமாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

அபராதம் விதிப்பு

இந்த வாகன சோதனையில் 300 வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த காற்று ஒலிப்பான்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் அகற்றப்பட்டு, வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது

மோட்டர் வாகன சட்டத்தின்படி வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ள காற்று ஒலிப்பான்களால் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்தது. 

இதையடுத்து கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் அந்த பகுதியை சேர்ந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் தடையை மீறி 300 வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த காற்று ஒலிப்பான்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் அகற்றப்பட்டன.

 மேலும் அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story