வேட்பாளர்கள் செய்ய வேண்டியது என்ன?


வேட்பாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
x
தினத்தந்தி 11 March 2021 12:03 AM IST (Updated: 11 March 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்யப் படுகிறது. எனவே வேட்பாளர்கள் செய்ய வேண்டியது குறித்து வால்பாறை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.

பொள்ளாச்சி,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வால்பாறை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியதாவது:-

வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வால்பாறை தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்கள் ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 

20-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 22-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் திரும்ப பெறலாம். அன்றைய தினமே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தெளிவாக இருக்க வேண்டும்

வால்பாறை தனி தொகுதி என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் சாதி சான்றிதழை கண்டிப்பாக இணைக்க வேண்டும். 2 பி வேட்புமனு படிவம், உறுதிமொழி பத்திரம் படிவம் 26 ஆகியவற்றை வேட்பாளர்கள் எந்தவொரு தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.  

நோட்டரி வக்கீல் கையெழுத்து பெற வேண்டும். சிறு தவறு இருந்தால், அவற்றை 19-ந் தேதி மாலை 3 மணிக்குள் திருத்தி திரும்ப கொடுக்கலாம். வேட்பாளர்கள் ஸ்டாம்பு அளவு புகைப்படம் கொடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதும். இதே அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். 

அந்த தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் முன்மொழியும் நபர்களின் பெயர்கள் இருக்க வேண்டும்.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் பெறப்படாது. வால்பாறை தனி தொகுதி என்பதால் வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வேட்பு மனு தாக்கலின் போது செலுத்த வேண்டும். 

வேட்பாளருடன் 2 பேர் அனுமதி 

அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி தலைமை அறிவித்த அசல் கடிதத்தை கொடுக்க வேண்டும். குற்ற பின்னணி, தண்டனை பெற்றவர்கள் மற்றும் வழக்கு நிலுவையில் இருந்தால், அதுகுறித்த விவரங்களை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். 

வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். 100 மீட்டர் தூரத்திற்குள் 2 வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story