லஞ்சம் வாங்கி கைதான சப்இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
தினத்தந்தி 11 March 2021 12:07 AM IST (Updated: 11 March 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க தொழிலாளியிடம் ரூ.1700 லஞ்சம் வாங்கி கைதான சப்இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை,


கோவைப்புதூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது35). தொழிலாளி. இவர்கள் கடந்த 27-ந்தேதி வேலைக்கு சென்றுவிட்டு காந்திபார்க் வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் (வயது56) என்பவர் ஸ்ரீதரை தடுத்து நிறுத்தினார்.

 ஸ்ரீதர் குடிபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். இதனை தொடர்ந்து அதனை வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிச்செல்லுமாறு கூறியுள்ளார். 

அதன்படி ஸ்ரீதர் தனது மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். 

அப்போது அங்கிருந்த  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், கணேசன் ஆகியோர் ஸ்ரீதரிடம்,  வழக்குப்பதிவு செய்து கோர்ட்டுக்கு சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும் என்றும், வழக்கிற்கும் அடிக்கடி கோர்ட்டுக்கு அலைய வேண்டும் என்றும் அதனை தவிர்க்க வேண்டுமானால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். 

அந்த அளவுக்கு தொகை கொடுக்க முடியாது என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். 3 ஆயிரமாவது கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ரூ.1,700தான் தர முடியும் என்று, கூறிவிட்டு இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது

ரூ.1,700-ஐ சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், கணேசன் ஆகியோரிடம் ஸ்ரீதர் கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் மடக்கிப்பிடித்து ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக இருளப்பன், கணேசன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் நிலையத்திலேயே, லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் லஞ்சம் வாங்கி கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், கணேசன் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.


Next Story