காண்டூர் கால்வாயில் தள்ளி விட்டு ஒர்க் ஷாப் ஊழியர் கொலையா போலீசார் விசாரணை


காண்டூர் கால்வாயில் தள்ளி விட்டு ஒர்க் ஷாப் ஊழியர் கொலையா போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2021 12:13 AM IST (Updated: 11 March 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒர்க் ஷாப் ஊழியர் காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டு கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரை சேர்ந்தவர் அம்சாவேல். இவரது மகன் பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் (வயது 19). ஐ.டி.ஐ. படித்து உள்ளார். பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவருடய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

இது குறித்த புகாரின்பேரில் வடக்கிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடு திரும்பவில்லை

அதில் ஆனைமலையில் உள்ள நண்பர் உதயகுமாரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும், ஆனைமலையை அடுத்த காளியாபுரத்தில் உள்ள கோழிப்பண்ணை அருகில் பிரசாந்தின் மோட்டார் சைக்கிள் கிடப்பது தெரியவந்தது. 

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர். மேலும் புருசோத்தமனின் நண்பர் உதயகுமாரை பிடித்து விசாரணை செய்தனர். 

கால்வாயில் தள்ளினார் 

அதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சேத்துமடை வழியாக செல்லும் காண்டூர் கால்வாய்க்கு சென்று உள்ளனர். அங்கு வைத்து இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார், புருசோத்தமனை காண்டூர் கால்வாயில் பிடித்து தள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

கதி என்ன?

பிறகு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் காண்டூர் கால்வாயில் புருசோத்தமனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  

சேத்துமடையில் இருந்து திருமூர்த்தி அணை வரை தேடி பார்த்தும் அவரது உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனவே புருசோத்தமனின் கதி என்ன? என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story