சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரம்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 தொகுதிகளுக்கும் அனுப்பி வைப்பு
நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 20-ந்தேதியும், வேட்புமனுக்களை வாபஸ் பெற 22-ந்தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை தொகுதியில் 408 வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 389 வாக்குச்சாவடிகளும், அம்பையில் 356 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 395 வாக்குச்சாவடிகளும், ராதாபுரத்தில் 376 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
நெல்லை தொகுதியில் உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தியும், அம்பை தொகுதியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாளும், பாளையங்கோட்டை தொகுதியில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணனும், நாங்குநேரி தொகுதியில் மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைவேலுவும், ராதாபுரம் தொகுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் உஷாவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு, நெல்லை ராமையன்பட்டியில் உள்ள அரசு குடோனில் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த சட்டசபை தொகுதிகளில் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சுழற்சி முறையில் தேர்வு
இதையடுத்து கணினி மூலம் ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களை விட கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்படி ஒவ்வொருக்கு தொகுதிக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் தலா 120 சதவீதமும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்க கூடிய விவிபேட் எந்திரங்கள் 133 சதவீதமும் தேர்வு செய்யப்பட்டன.
கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பு
5 சட்டசபை தொகுதிகளுக்கும் மொத்தம் 2,311 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,311 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 2,562 விவிபேட் எந்திரங்களும் அனுப்பப்பட்டன. இவற்றை லாரிகளில் ஏற்றி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தனர். வாக்குப்பதிவு எந்திரங்களுடன் லாரிகளில் மண்டல தேர்தல் அலுவலர்களும் சென்று கண்காணித்தனர்.
இந்த பணிகளை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை 5 சட்டசபை தொகுதிகளில் உள்ள கருவூல அலுவலகங்களில் வைத்து பூட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பின்னர் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அனைத்து வாக்குசாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story