மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 12:32 AM IST (Updated: 11 March 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து சிவங்கையில் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்துள்ள சக்கந்தி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 41).இவரது மனைவி சித்ரா. இவர்களது மகள் திவ்யாஸ்ரீ(17).இவர் சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
திவ்யஸ்ரீக்கு நேற்று முன்தினம் காலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதை தொடர்ந்து அவரை சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற மாணவியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே திவ்யாஸ்ரீ இறந்தார். இதை தொடர்ந்து மாணவியின் தந்தை கணேசன் சிவகங்கை நகர் போலீசில் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் எனது மகள் உயிரிழந்ததாகவும் எனவே அந்த மருத்துவமனை டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் திவ்யாஸ்ரீயின் உடல் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் திவ்யாஸ்ரீயின் இறப்பிற்கான காரணம் என்ன என தெரிவிக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனை டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் பல மணிநேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடலை வாங்கி செல்ல மறுத்து விட்டு சென்றனர்.


Next Story