கரூர் மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டி
கரூர் மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. கிருஷ்ணராயபுரம் தொகுதி கீதா எம்.எல்.வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கரூர்
அ.தி.மு.க. வேட்பாளர்கள்
கரூர் மாவட்டத்தில், கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, அரவக்குறிச்சி என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க. வெளியிட்டுள்ள 2-வது வேட்பாளர் பட்டியலில் கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 3 சட்டமன்ற மன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் சட்டமன்ற தொகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இவருக்கு வயது 56 ஆகிறது. இவர் 1984-ம் ஆண்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். 1984-ம் ஆண்டு மேலமைப்பு பிரதிநிதியாகவும், 2006-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தாந்தோணி ஒன்றிய செயலாளராகவும் இருந்து உள்ளார். 2015 முதல் கரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். உள்ளாட்சி பதவியில் தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினராக 15 ஆண்டுகள் (2001 முதல் 2016 வரை) இருந்து உள்ளார். 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவராகவும் இருந்து உள்ளார்.
தானேஷ் என்கிற முத்துக்குமார்
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் தானேஷ் என்கிற முத்துக்குமார் முதல் முதலாக போட்டியிடுகிறார். 41 வயதான இவர் பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இவர் கிளை செயலாளர், கரூர் மாவட்ட தாந்தோணி ஒன்றிய பொருளாளர், கரூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர், கரூர் நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் வகித்துள்ளார். தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.
எம்.எல்.ஏ.வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ம.கீதாவுக்கு மீ்ண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
என்.ஆர். சந்திரசேகர்
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மீண்டும் என்.ஆர்.சந்திரசேகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 64 ஆகிறது. பி.யூ.சி. படித்தவரான இவர் நெய்தலூரில் வசித்து வருகிறார். இவர் குளித்தலை தொகுதி இணைச்செயலாளர், 2 முறை தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தோகைமலை அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு ரமணாதேவி என்ற மனைவியும், சரண்யா, ஆர்த்தி என்ற இருமகள்களும் உள்ளனர்
Related Tags :
Next Story