திருப்பூரில் ஓடும் லாரியில் தீ
திருப்பூரில் ஓடும் லாரியில் தீ
அனுப்பர்பாளையம்,:
திருப்பூரில் ஓடும் லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கழிவு பஞ்சு எரிந்து நாசமாகியது.
லாரியில் தீப்பிடித்தது
திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த பொம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு நேற்று இரவு கழிவு பஞ்சு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது.
அந்த லாரியை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த ராமசாமி என்பவர் ஓட்டினார். லாரி புறப்பட்ட இடத்தில் இருந்து 100 அடி தூரம் செல்வதற்குள் லாரியில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.
சிறிதுநேரத்தில் லாரியில் இருந்த கழிவு பஞ்சு மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
பஞ்சுகள் எரிந்து நாசம்
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த லாரியை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் கழிவு பஞ்சு முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியும் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.
மின்மாற்றியில் உரசியதில் விபத்து
இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. லாரியில் ஏற்றப்பட்டிருந்த கழிவு பஞ்சு அந்த பகுதியில் உள்ள மின்மாற்றி மீது உரசியதில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அங்கு சிலமணி நேரம் மின்வினியோகம் தடைபட்டது. மேலும் தீப்பிடித்து எரிந்த லாரியை பார்க்க அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story