கும்பகோணத்தில் இருந்து பல்லடத்துக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்ட 18 டன் ரேசன் அரிசி பறிமுதல் மாவுமில் உரிமையாளர், டிரைவர் கைது


பறிமுதல் செய்யப்பட்ட லாரி
x
பறிமுதல் செய்யப்பட்ட லாரி
தினத்தந்தி 11 March 2021 1:35 AM IST (Updated: 11 March 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் இருந்து பல்லடத்துக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்ட 18 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மாவுமில் உரிமையாளர் மற்றும் லாரி டிரைவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் ஏட்டுகள், போலீசார் தஞ்சை-கும்பகோணம் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் இருந்து ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை சுவாமிமலை அருகே போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது லாரியில், மூட்டைகளில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

18.5 டன் அரிசி பறிமுதல்

இது தொடர்பாக கும்பகோணம் சோலையப்பன் தெருவை சேர்ந்த லிங்கதுரை(வயது 45), மயிலாடுதுறை மாவட்டம் திருவாலாங்காட்டை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சுந்தர்(32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களில் சுந்தர் லாரியை ஓட்டி வந்துள்ளார். இவர்கள் தங்களது உறவினருக்கு சொந்தமான லாரியை ரேசன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சையில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். லாரியில் 350 மூட்டைகளில் குருணை அரிசி இருந்தது. ஒவ்வொரு மூட்டையும் தலா 50 கிலோ எடை கொண்டது. மேலும் 1000 கிலோ அரிசியும் இருந்தது. மொத்தம் 18.5 டன் அரிசி இருந்தது.

கோழி தீவனத்துக்கு......

இதில் 17 ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசியை குருணையாக அரைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு கோழி தீவனத்துக்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட லிங்கதுரை மாவு மில் உரிமையாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் ரேசன் அரிசியை வாங்கி குருணையாக அரைத்து கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் லிங்கதுரை மற்றும் சுந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை போலீசார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.

Next Story