குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
குண்டடம்,:-
குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம்
குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடத்தை சுற்றி உள்ள சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் குறுகியகால பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துவருகின்றனர்
இது குறித்து விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது;-
கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு தக்காளி, மிளகாய், கத்தரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், இந்தப்பயிர்களுக்கு ஏற்ற மண் என்பதால் நல்ல மகசூல் கிடைக்கிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர்.
நஷ்டம்
இதில் கோ ஆன்-5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. கடந்த சில மாதங்களாக சின்னவெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானது. எனவே இந்த முறையும் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்துவருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ. 20முதல் ரூ.35 வரை விற்பதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நஷ்டமடைந்துள்ளனர்.
இதனால் தற்போது அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர்செய்து ஆட்கள் பற்றாக்குறை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். மேலும் நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர்பற்றாக்குறையால் விவசாயம் செய்யமுடிவதில்லை. தண்ணீர் கிடைத்து விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை. ஆகவே அரசு முன்வந்து உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வழங்கினால் நல்ல விலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story