போதமலையில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய மலைப்பாதையில் 5 கி.மீட்டர் நடந்து சென்ற கலெக்டர்


போதமலையில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய மலைப்பாதையில் 5 கி.மீட்டர் நடந்து சென்ற கலெக்டர்
x
தினத்தந்தி 11 March 2021 1:59 AM IST (Updated: 11 March 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் போதமலையில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய மலைப்பாதையில் கலெக்டர் மெகராஜ் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது போதமலை. இந்த போதமலையில் கீழூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழூர், கெடமலை, மேலூர் என 3 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,600 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிளகு, சாமை, தினை, கொள்ளு, நெல் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

போதமலையில் உள்ள கிராமங்களுக்கு ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் கிராமத்தில் இருந்தும், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டி பகுதியிலிருந்தும் கரடுமுரடான மலைப்பாதை வழியாகத்தான் நடந்து செல்லவேண்டும். போதுமான சாலை வசதி இல்லாததால் உடல்நலம் குன்றியவர்களையும், கர்ப்பிணிகளையும் டோலி மூலம் தான் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் அழைத்து சென்று வருகிறார்கள். மேலும் தேர்தலின் போது, அங்குள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் பொருட்கள் கழுதைகள் மூலமும், தலைச்சுமையாகவும் எடுத்து செல்லப்பட்டு வந்தன. போதமலையில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று அங்குள்ள மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் போதமலையில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார். இதற்காக அவர் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டி பகுதி வழியாக மலைப்பாதையில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். அவருடன் தேர்தல் அலுவலர்களும் உடன் சென்றனர்.
இதையடுத்து கலெக்டர் கெடமலை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது? யாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்பது குறித்து விளக்கம் அளித்தார். 
ஆய்வின் போது வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மற்றும் உதவி தாசில்தார், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story