மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து சேர்ந்தன


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து சேர்ந்தன
x
தினத்தந்தி 11 March 2021 2:14 AM IST (Updated: 11 March 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர், காரைக்குடி தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து சேர்ந்தன. அவை பூட்டிய அறையில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர், காரைக்குடி தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து சேர்ந்தன. அவை பூட்டிய அறையில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
மின்னணு வாக்கு எந்திரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்த்தல், அவற்றை அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் விளக்கம் அளித்து காட்டுதல், பழுதான எந்திரங்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்ட மன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பார்வையிட்டு மற்ற தொகுதிகளுக்கு எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று காலை சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை ஆகிய சட்ட மன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
இதையடுத்து திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது. இதில் 492 வாக்கு பதிவு எந்திரங்களும், 492 கட்டுப்பாட்டு கருவிகளும், 533 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1517  எந்திரங்கள் வந்தடைந்தது.
இதேபோல் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தும் விதமாக 532 வாக்கு பதிவு எந்திரங்களும், 532 கட்டுப்பாட்டு கருவிகளும், 576 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1640 எந்்திரங்களும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இவ்வாறு வந்தடைந்த மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைக்குள் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் சீல் வைக்கப்பட்ட அறை முன்பு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பூட்டி சீல் வைக்கப்பட்ட அறையை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story