சரக்கு வேன் டிரைவர் மர்மச்சாவு
நிலக்கோட்டை அருகே சரக்கு வேன் டிரைவர் மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கே. குரும்பபட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 40).
இவர், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் சரக்கு வேன் டிரைவராக பணிபுரிந்தார். அவருடைய மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு பிரேமா (14), ஜீவிதா (9), தனிஸ்குமார் (5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலையில் இவர், தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட வனிதா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சென்றாயன் உடலை கீழே இறக்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சென்றாயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சென்றாயனின் தலைப்பகுதியில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சென்றாயனின் வீட்டருகே உள்ள சாக்கடை கால்வாய் பகுதியில் ஆங்காங்கே ரத்தக்கறைகள் கிடந்தன.
இதனால் அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது. சென்றாயனை அடித்து கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகதேவி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story