விருத்தாசலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருத்தாசலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதனை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார். இதையடுத்து விருத்தாசலம் சன்னதி வீதியில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் தேர்தல் பங்கேற்பு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த கோலங்களை பார்வையிட்ட கலெக்டர், மகளிர் குழுவினரை பாராட்டினார்.
அதனை தொடர்ந்து தேர்தல் பங்கேற்பு மற்றும் முறையான வாக்காளர் கல்வி குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், வாக்களிப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு தாசில்தார் சிவக்குமார் பயிற்சி அளித்ததை கலெக்டர் பார்வையிட்டார்.
துண்டு பிரசுரம்
பின்னர் விருத்தாசலம் கடைவீதி பகுதியில் நடந்து சென்று, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துணிப்பையும், துப்புரவு பணியாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஆடைகளையும் வழங்கினார். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களில் 18 வயது நிரம்பிய வாக்காளர்களின் பெருமையை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார், ஊட்டச்சத்து நல அலுவலர் தனபாக்யம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு
முன்னதாக விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்குப்பதிவு முடிந்தவுடன், இரண்டு சட்டமன்ற தொகுதியில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து வைப்பது எப்படி?, என்றும், அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மற்றும் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக அமைக்கப்பட்டுள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியிலும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story