இனி எப்போதும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது- விஜயபிரபாகரன்
உரிய மரியாதை கொடுக்காததால் கூட்டணியில் இருந்து விலகியதாகவும், இனி எப்போதும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என்றும் விஜயபிரபாகரன் பேசினார்.
அண்ணாமலைநகர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு பேசியதாவது:-
நடராஜர் நடனம் ஆடும் மண்ணில் இருந்து சொல்கிறேன், இனிதான் விஜயகாந்தின் ஆட்டம் தொடங்க இருக்கிறது. 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைந்தபோது, நீங்கள் ஒன்றிணைந்து 10 முதல் 15 தொகுதிகளில் தே.மு.தி.க.வை வெற்றிபெற வைத்திருந்தால் இந்த அளவுக்கு யாரும் நம்மை தரம் தாழ்ந்து பேசியிருக்க மாட்டார்கள்.
மரியாதை கொடுக்கவில்லை
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நாம் வெளியே வந்துவிட்டோம். இனி அ.தி.மு.க.வை வீழ்த்துவதே நம் ஒரே குறிக்கோள். நீங்கள் தற்போது காட்டும் எழுச்சியை அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி வரை தொடர்ந்து காட்ட வேண்டும். தேர்தலில் எதற்காக நாம் கூட்டணி வைக்கிறோம். பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு அளிக்கும் மரியாதையை தே.மு.தி.க.விற்கு ஏன் கொடுக்கவில்லை. நாம் 29 எம்.எல்.ஏ.க்கள் பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்து உள்ளோம். ஆனால் அவர்கள் நமக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. அதனால் நாம் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.
மக்களை சோம்பேறி ஆக்கி விடுவார்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது விஜயகாந்த் வந்து தலை காட்டினாலே போதும் என்று பிரசாரத்திற்காக அழைத்தார்கள். அன்று உங்களுக்காக உழைத்தார் விஜயகாந்த். கூட்டணி தர்மத்திற்காக பொறுமை காத்தோம்.
தே.மு.தி.க. தொண்டர்கள் இன்றும் நண்பர்களாக இருக்கிறோம். தலைமையில் தான் பிரச்சினை. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்குவதாக கூறியதை பெரிதாக சொல்கின்றனர். ஆனால் இதனை 15 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் சொல்லியபோது இங்கு நகைத்தனர். மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, ரூ.1,500, இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று இலவசங்களை அள்ளிக் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கி விடுவார்கள்.
ஆட்சியாளர்கள் ஏமாற்றுகிறார்கள்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல் ஆட்சியாளர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர். ஓட்டுக்கு பணம் பெறும் நிலை மாற வேண்டும். இளைஞர்கள் அனைவரும் தே.மு.தி.க.விற்கு ஆதரவு தரவேண்டும்.
கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து மக்கள் சேவையாற்றி வருபவர் விஜயகாந்த். என்றைக்கும் மக்கள் பணத்திற்கு ஆசைப்பட்டதில்லை. அவர்களுக்கு துரோகம் இழைத்ததும் இல்லை.
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் தனது கல்லூரி இடத்தை நோயாளிகளுக்காக கொடுத்து உதவினார் விஜயகாந்த்.
நாங்கள் குடும்பத்துடன் மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம். விஜயகாந்த் ஒரு பெரிய நிழல். அந்த நிழலில் வாழவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் தனித்துவத்துடன் செயல்படுவேன் என் தந்தையின் கனவை நிறைவேற்ற பாடுபடுவேன். அவரை சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன். 10 ஆண்டுகள் அ.தி.மு.க.வை வாழவைத்தோம். இனி எப்போதும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story