மாணவ- மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்
புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்:
புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கையெழுத்து இயக்கம்
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடந்தது.
விழாவில் கலெக்டர் அரவிந்த் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவ-மாணவிகள்
குமரி மாவட்டத்தில் வாக்குரிமை உள்ள பொதுமக்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஜனநாயக உரிமையாகிய வாக்குரிமையை நிறைவேற்றும் வகையில் நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
மேலும் மாணவிகள் தங்களது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய மாணவிகள் அனைவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை சரிபார்ப்பது அவசியம். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாத மற்றும் இடம்பெறாத மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சிகள், மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று படிவம் 6-ஐ பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ள முன்வர வேண்டும்.
கொரோனா தடுப்பூசி
விண்ணப்பித்த பின்னர் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை கண்டறிய 04652-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்புக் கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் தங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். பெற்றோரிடமும் முக கவசம் அணிந்து கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூறி வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க செல்லும் போது அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் 60 வயது நிரம்பிய அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு
முன்னதாக மாணவிகள் வாக்குப்பதிவு வடிவில் திரண்டு நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
விழாவில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story