திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 March 2021 3:26 AM IST (Updated: 11 March 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் நேற்று இடி-மின்னலுடன் மழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சி, 
திருச்சி மாநகரில் நேற்று இடி-மின்னலுடன் மழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுட்டெரித்த வெயில்

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் பிப்ரவரி மாதம் தொடங்கி விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடும். கோடை காலம் ஏப்ரல் மாதம் கடைசியில் தொடங்கி மே இறுதிவரை நீடிக்கும்.
ஆனால், இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கும் வகையில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்றும் காலை முதலே வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இடி-மின்னலுடன் கொட்டிய மழை

இந்த நிலையில் திருச்சியில் மாநகரில் நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகம் திரண்டு சிலு சிலுவென குளிர்ந்த காற்று வீசியது. மாலை 5 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட், உறையூர், தில்லைநகர், கே.கே.நகர், திருச்சி பழைய தபால் நிலையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேறும், சகதியுமான சாலை

எதிர்பாராத மழையால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காய்கறி விற்பனை மழையால் பாதிக்கப்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட்டிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டது. 

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக நேற்று பெய்த பலத்த மழையால் சாலையே சேறும், சகதியுமாக மாறிவிட்டது. 

திருச்சி கிராப்பட்டி, அருணாசலம் நகர், பாரதி மின் நகர், பாப்பா காலனி, ஆர்.எம்.எஸ். காலனி, ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட செம்மண் சாலையில் நிரம்பி கிடந்ததால், மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிட்டன.

Next Story