ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்; கோபி-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போட்டி
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினா் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.
6 தொகுதிகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மேற்கு, கோபி, பவானி, அந்தியூர், பவானிசாகர்(தனி), பெருந்துறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்களது வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:-
1. கோபி தொகுதி- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
2. பவானி தொகுதி -
அமைச்சர் கே.சி.கருப்பணன்
3. ஈரோடு மேற்கு தொகுதி -
கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.
4. பெருந்துறை தொகுதி-
எஸ்.ஜெயக்குமார்.
5. அந்தியூர் தொகுதி -
கே.எஸ்.சண்முகவேல்
6. பவானிசாகர் - எ.பண்ணாரி
மொடக்குறிச்சி தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கோபி தொகுதி கே.ஏ.செங்கோட்டையன்
கோபி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.ஏ.செங்கோட்டையன் 9-1-1948-ம் ஆண்டு கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ள இவர் முதன் முதலாக 1969-ல் குள்ளம்பாளையம் ஊராட்சி தலைவராக பதவி வகித்தார். 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். பின்னர் கடந்த 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்தியமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கோபி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்று உள்ளார். 1991- 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2011-ம் ஆண்டு வேளாண்மைத்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்து உள்ளார். தற்போது பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
ஏற்கனவே, இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர் ஆவார். தற்போது அ.தி.மு.க.வில் கழக அமைப்பு செயலாளராக உள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவம் மிக்கவர்.
இவரது தந்தை பெயர் அர்த்தனாரி கவுண்டர், தாய் காளியம்மாள். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஈ.எஸ்.கதிர் என்ற மகனும் உள்ளனர். கதிர் தொழில்அதிபர் ஆவார்.
பவானி தொகுதி கே.சி.கருப்பணன்
பவானி தொகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் மீண்டும் அ.தி.மு.க.வில் போட்டியிடுகிறார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி வேலம்பாளையம் அருகே உள்ள காட்டுவலசு என்ற கிராமத்தை சேர்ந்த இவர் பவானி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரானார். இவருக்கு வயது 64. மேலும் விவசாயம் பார்த்து வருகிறார். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு கவுந்தப்பாடியில் உள்ள காட்டுவலசு பகுதி கிளை செயலாளர் ஆனார். 1994-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பவானி ஒன்றிய கழக அவைத்தலைவராகவும், 1999-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பவானி ஒன்றிய செயலாளராகவும் இருந்தார்.
2001-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2006-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
2006-ம் ஆண்டு மீண்டும் பவானி சட்டமன்ற தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
பின்னர் 2011-2016 வரை பவானி நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மறுபடியும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். மேலும் ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.
கே.சி.கருப்பணனுக்கு தேவி என்ற மனைவியும், யுவராஜா என்ற மகனும் உள்ளனர். இவர் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
ஈரோடு மேற்கு தொகுதி கே.வி.ராமலிங்கம்
ஈரோடு மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வரும் கே.வி.ராமலிங்கம் மீண்டும் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிட அறிவிக்கப்பட்டு உள்ளார். கே.வி.ராமலிங்கத்தின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கள்ளிவலசு பகுதியாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் குமாரத்தாள் என்கிற அம்மினி. இவருக்கு மீனா பிரீத்தி, ஆர்த்தி பிரியதர்ஷினி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ரத்தன் பிரித்திவ் என்ற மகன் உள்ளார். இவர் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக உள்ளார்.
கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.கொங்கு வேளாள கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர். இவர் பி.ஏ. பட்டப்படிப்பு படித்து உள்ளார். தொடக்க காலத்தில் இருந்தே கட்சியின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்தார். தாராபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 2003 முதல் 2008-ம் ஆண்டுவரை ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். 2008-ம் ஆண்டு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2010-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் டெல்லி மேல்சபைக்கு எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரானார். கடந்த 2016-ம் ஆண்டு ஈரோடு மேற்கு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பதவியிலும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெருந்துறை தொகுதி எஸ்.ஜெயக்குமார்
பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக எஸ்.ஜெயக்குமார் (வயது 40) அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடைய சொந்த ஊர் பெருந்துறையை அடுத்துள்ள சரளைபுதுப்பாளையம் ஆகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் பி.பி.எம் பட்டதாரி. கூட்டுறவு டிப்ளமோ படிப்பும் முடித்துள்ளார்.
இவருக்கு சண்முகப்பிரியா என்கிற மனைவியும், தர்ஷிகா, ரித்திகா என்கிற 2 மகள்களும் உள்ளனர். இவருடன் தந்தை சுப்பிரமணியம் மற்றும் தாயார் கவுரி வசித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் தற்போது ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலராக பதவி வகித்து வரும் ஜெயக்குமார், இதற்கு முன்பு மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.
ஜெயக்குமார் ரியல் எஸ்டேட், ரிசார்ட், ரெசிடென்சி, பார்ம் ஹவுஸ், ஹாலோ பிளாக் மற்றும் பிளை ஆஸ் தயாரிப்பு ஆகிய தொழில்களையும் செய்து வருகிறார்.
அந்தியூர் தொகுதி கே.எஸ்.சண்முகவேல்
அந்தியூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.சண்முகவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 60 வயதான இவர் அந்தியூர் கல்பாடிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தற்போது மாவட்ட கவுன்சிலராக உள்ளார். மேலும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராகவும், ஈரோடு சிந்தாமணி துணை தலைவராகவும், கட்சியின் மாவட்ட தலைவராகவும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இவர் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
பவானிசாகர் தொகுதி(தனி) எ.பண்ணாரி
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டியை சேர்ந்த எ.பண்ணாரி (வயது 41) என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க. பெரிய கள்ளிப்பட்டி கிளை செயலாளராக உள்ளார். பி.ஏ.பட்டதாரி. விவசாய கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு நாகமணி என்ற மனைவியும், ஸ்ரீமதி (16), ஸ்ரீநிதி (16), தனஸ்ரீ (12) ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story