நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- தர்மபுரி கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தல்
நேர்மையான முறையில் வாக்களிக்க கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
நேர்மையான முறையில் வாக்களிக்க கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தினார்.
உறுதிமொழி ஏற்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகா தலைமையில் கல்லூரி மாணவ-மாணவிகள் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த தேர்தலில் சிறப்பம்சமாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு வரும் அனைத்து வாக்காளர்களும் முக கவசம் அணிந்து வர வேண்டும்.
விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்கள் தவறாது தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்திட வேண்டும். நேர்மையான முறையில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மற்ற ஆவணங்களை காட்டி தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், தாசில்தார்கள் ரமேஷ், சரவணன், உதவி திட்ட அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story