விடிய, விடிய பெய்த கோடை மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
விடிய, விடிய பெய்த கோடை மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் எதிர்பாராதவகையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
குறிப்பாக ஆண்டிப்பட்டி மற்றும் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வெள்ளிமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
இதனையடுத்து வறண்டு போகும் நிலையில் இருந்த வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோடை வெயில் கொளுத்தும் மார்ச் மாதத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் வெள்ளம் வந்தது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீர்மட்டம்
இதனால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 63.78 அடியாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வைகை அணை நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நீர்வரத்து இன்றி காணப்பட்ட வைகை அணைக்கு நேற்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 721 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டது.
மழையளவு
மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 350.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஒவ்வொரு பகுதியிலும் பெய்த மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
ஆண்டிப்பட்டி-87.2, அரண்மனைப்புதூர்-15.6, போடி-13.2, கூடலூர்-15, மஞ்சளாறு-14, பெரியகுளம்-44, முல்லைப்பெரியாறு-34.6, தேக்கடி-9.6, சோத்துப்பாறை-18, உத்தமபாளையம்-32.2, வைகை அணை-37.2, வீரபாண்டி-30 என மழையளவு பதிவானது.
Related Tags :
Next Story