வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு


வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 March 2021 9:00 PM IST (Updated: 11 March 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்யலாம்.

அதன்படி ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு சப்-கலெக்டர் அலுவலகம், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு சப்-கலெக்டர் அலுவலகம், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சாலையில் குறியீடு வரையப்பட்டு உள்ளது. அப்பகுதியில் போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறவர்கள் ஊர்வலமாக வந்தால், அந்த 100 மீட்டர் தூரத்துக்குள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். 

அதன்பிறகு வேட்பாளருடன் 2 பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். நுழைவாயில் வரை 2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வருகிற 19-ந் தேதி வரை வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

ஊட்டி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள், கடைசி நாள், வேட்புமனுவை திரும்ப பெறும் நாள், மனுக்கள் பரிசீலனை நாள் போன்ற விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் நேற்று ஊட்டியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.


Next Story