வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்


வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 March 2021 9:23 PM IST (Updated: 11 March 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மகாசிவராத்திரி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளகோவில்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மகாசிவராத்திரி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீரக்குமாரசாமி கோவில் 
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் புகழ்பெற்ற வீரக்குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீரக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலை சேர்ந்த குலத்தவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் உள்ளனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெறும். இந்த  தேர்த்திருவிழா தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறும். 
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் இருப்பதால் 2 நாள் மட்டும் தேரோட்டம் நடத்த தாராபுரம் சப்- கலெக்டர் பவன்குமார் அனுமதி வழங்கினார். இதையடுத்து  கடந்த மாதம் 22-ந் தேதி காலை தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி  தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் காலை செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பிற்பகல் 3 மணி அளவில் பள்ளய பூஜை நடைபெற்றது. 
தேரோட்டம் 
பின்னர் 4.30 மணிக்கு மேல் வீரக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி தேரில் எழுந்தருளினார். பின்னர்  முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் முதன்மைக்காரர்கள் நற்பணி மன்ற தலைவர் என்.டி.பாலசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர்கள் வி.ஜி.ராமசாமி, எஸ்.கே.குணசேகர்,ஜெ.சுந்தரவடிவேல்,கே.குமாரசாமி,மணி உள்பட  கோவில் குலத்தவர்கள்,பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிது தூரம் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் தேர் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தேரோட்டத்தையொட்டி  வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் அமைத்து இருந்தனர். நகராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேரோட்டத்தையொட்டி காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமையில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஈடுபட்டிருந்தனர்,
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் 2-வதுநாள் தேரோட்டம் நடைபெற உள்ளது, அதன் பின்னர் தேர் நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் சுவாமி தேர்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நடைபெற உள்ளது. 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது. 

Next Story