17 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.84¾ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
திருப்பூரில் அரசு வேலைவாங்கி தருவதாக கூறி 17 பேரிடம் ரூ.84 லட்சத்து 92 ஆயிரத்தை மோசடி செய்த 2 பேரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ிருப்பூர்
திருப்பூரில் அரசு வேலைவாங்கி தருவதாக கூறி 17 பேரிடம் ரூ.84 லட்சத்து 92 ஆயிரத்தை மோசடி செய்த 2 பேரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.84 லட்சத்து 92 ஆயிரம் மோசடி
திருப்பூர் காங்கேயம் ரோடு வி.ஜி.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). பனியன் நிறுவன ஊழியர். இவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது நண்பரின் மூலமாக சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்த சதீஷ்ராஜா, அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த பிரேம்குமார், மற்றும் கீதா, ஜெயலட்சுமி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இவர்கள் 4 பேரும் திருப்பூரில் உள்ள எனது வீட்டுக்கு வந்தனர். சதீஷ்ராஜாவின் உறவினர் ஒருவர் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்து வருவதாகவும், சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்கள்.
இதை நம்பி நான் மற்றும் 16 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.84 லட்சத்து 92 ஆயிரத்தை 4 பேரிடம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி தராமலும் இழுத்தடித்தனர். அதன்பிறகே அவர்கள் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் சுந்தரவடிவேல் ஆகியோர் உத்தரவின் பேரில் இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டுகள் வசந்தகுமார், வினோ ஆனந்தன், ஆயுதப்படை போலீஸ்காரர் கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
விசாரணையில் சதீஷ்ராஜா உள்பட 4 பேரும் சேர்ந்து அரசு வேலைவாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சதீஷ்ராஜா (36), பிரேம்குமார் (36) ஆகியோரை தனிப்படை போலீசார் சேலத்தில் கைது செய்து பின்னர் நேற்று திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் பாராட்டினார்கள்.
ஏமாற வேண்டாம்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களை யாரும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கமிஷனர் எச்சரித்துள்ளார்.
----
Related Tags :
Next Story