கோவில்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார்?
தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்கி உள்ள கோவில்பட்டி தொகுதி பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.
கோவில்பட்டி,
வானம் பார்த்த மானாவாரி கரிசல் பூமியான இந்த பகுதியில் விளைவிக்கப்படும் நிலக்கடலையில் இருந்து தயாராகும் கடலை மிட்டாய் தனிச்சுவை கொண்டது. ஊட்டச்சத்து மிக்க கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றதால், அதனை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகள் பயனடைகின்றனர்.
இதேபோல் கோவில்பட்டி பகுதியில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளின் மூலம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மேலும் கோவில்பட்டி பகுதியில் நூற்பாலைகளும், பட்டாசு ஆலைகளும், கயத்தாறு பகுதியில் பாய் தொழிற்சாலைகளும் கணிசமாக உள்ளன.
வறண்ட பூமியான கோவில்பட்டி பகுதியில் நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம், பாசி, உளுந்து, கம்பு போன்றவற்றை பெரும்பாலான விவசாயிகள் பயிரிடுகின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில், அவரது நினைவாக கட்டப்பட்ட மணிமண்டபம் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் வக்கீலாக பணியாற்றிய பெருமையும் கோவில்பட்டிக்கு உண்டு.
மாவட்டத்தின் 2-வது பெரிய நகரான கோவில்பட்டி நகராட்சியாக திகழ்கிறது. இந்த தொகுதியில் கோவில்பட்டி, கயத்தாறு ஆகிய 2 தாலுகாக்களும், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் ஆகிய 3 நகர பஞ்சாயத்துகளும் உள்ளன. மேலும் கோவில்பட்டி, கயத்தாறு ஆகிய 2 யூனியன்களையும் கொண்டுள்ளது.
இதுவரை 15 சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ள கோவில்பட்டி தொகுதியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிகபட்சமாக 7 முறை (1967, 1971, 1977, 1980, 1989, 1996, 2001) வென்றுள்ளது. அ.தி.மு.க. 4 முறையும் (1991, 2006, 2011, 2016), காங்கிரஸ் 3 முறையும் (1952, 1962, 1984) வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு முறை (1957) வென்றுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜூ 64 ஆயிரத்து 514 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு 64 ஆயிரத்து 86 வாக்குகள் கிடைத்தன. தற்போது கோவில்பட்டி தொகுதியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 484 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 385 பெண் வாக்காளர்களும், 31 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டியில் நிறைவேற்றப்பட்ட 2-வது குடிநீர் திட்டத்துக்காக பல்வேறு தெருக்களிலும் குழி தோண்டப்பட்டதால், குண்டும் குழியுமாக உள்ளன. எனவே, அங்கு புதிய சாலைகளை அமைக்க வேண்டும். நலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் வகையில், தீப்பெட்டிக்கு சரக்கு சேவை வரியை குறைக்க வேண்டும். இதற்கான மூலப்பொருட்களை தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைக்க செய்ய வேண்டும். சாலை விரிவாக்க பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
கோவில்பட்டி-இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க வழிப்பாதையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். அறுவடை செய்யப்படும் பயிர்களை பாதுகாக்கும் வகையில், குளிர்ப்பதன வசதியுடன் போதிய சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு சத்துணவுடன் கடலைமிட்டாயும் சேர்த்து வழங்க வேண்டும். பாய் உற்பத்திக்கு தேவையான கோரைப்புற்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமித்து தரம் உயர்த்த வேண்டும். கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம்- கூடுதல் பஸ் நிலையம் இடையே 24 மணி நேரமும் சர்குலர் பஸ் இயக்க வேண்டும். கழுகுமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. மேலும், இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கதிரவன் களம் இறங்கி உள்ளார்.
இந்த தொகுதியில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி வாகை சூடப்போவது யார்? என்பதற்கு மே மாதம் 2-ந்தேதி விடை கிடைக்கும்.
Related Tags :
Next Story