கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 March 2021 10:39 PM IST (Updated: 11 March 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் மீன் பிடித்ததாக கூறி விவசாயியை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதால் விரக்தி அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி

விவசாயி

கள்ளக்குறிச்சி அருகே புத்தந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 50). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை புத்தந்தூர் கிராமப்பகுதியில் உள்ள தனது நிலத்தை பார்த்துவிட்டு ஆலத்தூர் ஏரிப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ஏரியில் மீன் வளர்க்க குத்தகை எடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் புகழேந்தியை பிடித்து நீ ஏரியில் திருட்டுத்தனமாக மீன் பிடிக்க வந்தாயா என கேட்டு ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளனர். பின்னர் அவரது கைகளை கட்டி வாகனத்தில் ஏற்றி ஆலத்தூர் பஸ் நிறுத்தத்துக்கு கொண்டு சென்று அங்கு மரத்தில் கட்டிவைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பூச்சிமருந்து குடித்தார்

இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை கண்ட குத்தகைதாரர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த புகழேந்தியை மீட்டு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

வீட்டிற்கு சென்ற புகழேந்தி பொது இடத்தில் தன்னை கட்டிவைத்து அடித்த அவமானம் தாங்க முடியாமல் பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர் புகழேந்தியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து புகழேந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்துநாயக்கர் மகன் பரசுராமன், மொட்டையகவுண்டர் மகன் வெற்றி, நாராயணன் மகன் மணிவேல், குப்புசாமி மகன் ராமு ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் புகழேந்தியை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி புத்தந்தூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மீன்பிடித்ததாக கூறி விவசாயியின் கைகளை கட்டிப்போட்டு அவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Next Story