வால்பாறை தொகுதியில் போட்டியிட கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ.விற்கு வாய்ப்பு தர வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


வால்பாறை தொகுதியில் போட்டியிட கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ.விற்கு வாய்ப்பு தர வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2021 11:55 PM IST (Updated: 11 March 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை தொகுதியில் போட்டியிட, கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ.விற்கு மீண்டும் வாய்ப்பு தர வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வால்பாறை,

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி, தேர்தல் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு வழங்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

 மேலும் தமிழகம் முழுவதும் சில இடங்களில் வேட்பாளர்கள தேர்வில் அதிருப்தி அடைந்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு அமுல் கந்தசாமியை வேட்பாளராக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

சாலை மறியல்

இந்தநிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசுவிற்கு மீண்டும் அந்த போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வால்பாறை கருமலை எஸ்டேட் 12-வது வார்டு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் மோகன்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் 40-வது கொண்டைஊசி வளைவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் சமாதானம் அடைந்த அவர்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story