சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது


சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 March 2021 12:01 AM IST (Updated: 12 March 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. வேட்பாளருடன் 2 பேர் மட்டும் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரூர்
வேட்புமனு தாக்கல்
கரூர் மாவட்டத்தில், வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளின் போது பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை விடுமுறை நாட்கள் நீங்கலாக தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளன. 
2 பேர் மட்டுமே அனுமதி
வேட்புமனு பெறும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லை வரை தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு வேட்பாளருக்கு 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு பெறும் அறைக்குள் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் மற்றும் உடன் வருபவர்கள் தவறாது முககவசம் அணிந்து வரவேண்டும். 
இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் மூலமாகவும் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவில் வேட்பாளரும் அவரை முன் மொழிபவரும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். 
வேட்புமனு திரும்ப பெற...
வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் எவ்வித தலையீடுமின்றி தாமாகவே நடத்த வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனு பரிசீலனையில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பு மனு பரிசீலனையை மேற்கொள்ளலாம். பரிசீலனையின் போது மனுக்கள் ஒவ்வொன்றாக பரிசீலிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படும் மனுக்கள், தனியே பதிவு செய்யப்படுவதுடன், அதற்குரிய காரணங்கள் குறிப்பாக எழுதப்பட வேண்டும். அதேபோல், ஏற்கப்படும் மனுக்கள் குறித்தும், காரணங்கள் குறிப்பாக எழுதப்படவேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர், தன்னிச்சையாகவும் மனுக்கள் மீது ஆட்சேபனை எழுப்பலாம். வேட்புமனு திரும்ப பெற நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வருகிற 22-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக, நிர்ணயிக்கப்பட்ட படிவம் 5-ல் மனு செய்து தங்களது வேட்பு மனுவை, வேட்பாளர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 
வேட்புமனு பரிசீலனை முடிவு பெற்ற பின்னர்தான் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற வேட்பாளர் படிவம் 5-ல் மனு செய்யலாம். 
சின்னங்கள் ஒதுக்கீடு
வேட்பு மனுவை திரும்பப்பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை, தேர்தல் நடத்தும் அலுவலர் படிவம் 6-ல் தயாரித்து வெளியிட வேண்டும். அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர்களுக்கு இ-மெயில் மூலமும் தபால் மூலமும் அனுப்ப வேண்டும். தகுதியான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன்பாக, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், குளித்தலை தேர்தல் நடத்தும் அலுவலர்  ஷேக்அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story