மயிலாடுதுறையில், பொதுமக்கள் சாலை மறியல்


மயிலாடுதுறையில், பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2021 6:40 PM GMT (Updated: 11 March 2021 6:40 PM GMT)

பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதை கண்டித்து மயிலாடுதுறையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை:
பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதை கண்டித்து மயிலாடுதுறையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதாள சாக்கடை கழிவுநீர்
மயிலாடுதுறை நகரில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் முறையாக செயல்படுத்த படாததாலும், சரிவர பராமரிக்கப்படாததாலும் நகரில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக ரெயிலடி மாமரத்து மேடை மெயின்ரோட்டில் இருந்து ஆரோக்கியநாதபுரத்துக்கு பிரிந்து செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல தேங்கி கிடக்கிறது.
சாலை மறியல் 
இதனால் ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் அந்த சாலையில் உள்ள வீட்டின் வாசலில் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதனை கண்டித்து மாமரத்து மேடை பகுதியில் கும்பகோணம் சாலையில் பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது 3 நாட்களுக்குள் மாமரத்து மேடை பகுதியில் உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, இனி அந்த பகுதியில் கழிவு நீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
 இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story