ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.6½ லட்சம் பறிமுதல்
பொள்ளாச்சி தொகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.6½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி,
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் பிரிவில் வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது காரில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் கேரளாவை சேர்ந்த சையதலி என்பவர் வந்தது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று வடக்கிபாளையம் பிரிவில் உதவி பொறியாளர் ராஜீவ்காந்தி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து காரில் வந்த மொய்தீன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.75 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பணம் பறிமுதல்
பொள்ளாச்சி-பல்லடம் ரோடு காட்டம்பட்டியில் மாநில வரி அலுவலர் சுகுமார் தலைமையில் நடந்த வாகன சோதனையில் கேரளாவை சேர்ந்த முகமது யூனுஸ் என்பவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.பொன்னாபுரம் பிரிவில் உதவி செயற்பொறியாளர் ராஜராஜன் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவணங்கள் இல்லாததால் கேரளாவை சேர்ந்த ஹாசிப் என்பவரிடம் இருந்து ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வடக்கிபாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த ஆனாஷ் என்பவரிடம் ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story