5 சட்டசபை தொகுதிகளில் 45,128 பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் வழங்க ஏற்பாடு


5 சட்டசபை தொகுதிகளில் 45,128 பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 12 March 2021 12:37 AM IST (Updated: 12 March 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 45,128 பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவு தபால் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 45,128 பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவு தபால் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக இடம் பெற்றுள்ள 45 ஆயிரத்து 128 வாக்காளர்களுக்கு தபால் துறை மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

இதற்கான பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ள வாக்காளர் அடையாள அட்டையை, கலெக்டர் விஷ்ணு வழங்க, அதனை தபால் துறை நெல்லை கோட்ட உதவி கண்காணிப்பாளர் ரகுநாத் பெற்றுக் கொண்டார்.

5 தொகுதிகள்

இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் முதன் முறையாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 45 ஆயிரத்து 128 வாக்காளர்களுக்கு தபால் மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், பயிற்சி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தபால் துறை மக்கள் தொடர்பு அலுவலர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story