வாக்காளர் சேவை மையம்
விழுப்புரத்தில் வாக்காளர் சேவை மையத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம், மார்ச்.
சட்டமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- இந்த சேவை மையத்தில், வாக்காளர்கள் பெயர் அறியும் வசதி, வாக்காளர் பதிவு, அடையாள அட்டை வழங்குதல், தேர்தல் அடையாள அட்டை நகல் வழங்குதல், வாக்களிக்கும் முறையை விவரிக்கும் பொருள் வழங்குதல், வாக்காளர் வாக்குச்சாவடியை அறிய உதவும் வசதி உள்ளிட்டவை குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
விவரங்கள் பெறலாம்
அதுமட்டுமின்றி வாக்காளர் அட்டை சிதைந்திருந்தால் ரூ.25 கட்டணம் செலுத்தி புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் வாக்காளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெறலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகவரி, தொகுதி மாற விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள் ஆகியோர் தேர்தலுக்கு முன் அவற்றுக்காக விண்ணப்பித்தால் அவர்கள் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் இனி விண்ணப்பிப்பவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் ஆகியவற்றில் பெயர்கள் சேர்க்கப்பட்டவர்கள் வரக்கூடிய தேர்தலில் வாக்களிக்கலாம். வேட்புமனு தாக்கல் தொடங்கிய பின்பு வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பிப்பவர்கள் இத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றனர்
Related Tags :
Next Story